Monday, March 20, 2017

மிஷனரிக் கண்ணாடி


பரிசுத்த வேதாகமத்தை நாம் பல விதங்களில் வாசிக்கலாம். அருட்பணி (மிஷனரி) பரிமாணத்தில் நாம் வேதத்தை வாசிப்பது ஒரு முறை. அதற்கு நாம் ஒரு மிஷனரிக் கண்ணாடியை போட்டுக் கொள்ளவேண்டும். ஆதியாகம புத்தகத்திலிருந்து நாம் துவங்கி முக்கியமான சில‌ வேத கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கற்றறியலாம். இப்பயணத்திற்கு உங்களை அழைக்கிறேன். ஆதிப் பெற்றோரான ஆதாம், ஏவாள் என்பாரைக் குறித்து இங்கு காண்போம்.

சிருஷ்டிப்பின் சிகரம்
ஒரு ராஜாவும், ராணியும் இல்லாத ஒரு அரண்மனையாகவே ஏதேன் தோட்டம் இருந்தது. ஆதாம், ஏவாள் சிருஷ்டிக்கப்பட்டப் பிறகே படைப்பு பூரணமானது. எல்லா சிருஷ்டிப்பிலும், "ஆகக்கடவது" என்ற வார்த்தை கோர்வையைக் காண்கிறோம்.  ஆனால் மனிதகுலத்தைப் படைத்த போது, "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" (ஆதியாகமம் 1:26) என்று திரித்துவ தேவனின் செயல்பாட்டை பார்க்கிறோம்.மேலும் மனித குலம் மாத்திரமே தேவ சாயலில் படைக்கப்படுகின்றனர். திரித்துவ தேவன் மனித வர்க்கத்தை உச்ச ஸ்தானத்தில் வைக்கின்றார். ஆதாமும், ஏவாளும் மூன்று தேவ இலட்சணங்களைப் பெறுகின்றனர்: சிந்திக்க, உணர, தெரிவு செய்ய. தேவனுடைய பெரியக் கட்டளை வேதத்தின் முதல் பக்கத்தில் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இவ்விதமாகக் கொடுக்கப்பட்டத்து: தேவசாயலில்... நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் (1:28‍ 29). வெளிப்புறமாக ஆசரிக்கக்கூடிய ப‌ரிசுத்த நாளைக் குறித்த ஒரு கருத்து ஆதியாகமம் 2:1‍ 3 ல் காணப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் காக்கவும் ஆதாமை ஆசீர்வதிக்கப்பட்ட சூழலில் தான் தேவன் பணித்தார் (2:15). மனித குலம் செய்து காத்துக்கொள்ளக்கூடிய பரிசுத்த சூத்திரம் கொடுக்கப்படுகின்றது: நீ இதைச் செய்தால், என்னோடு ஐக்கியம் கொள்ளலாம், என்று! (2:16, 17). இன்றும் நமது அருட்பணியின் அழுத்தம் வேலை செய்ய வேண்டும் என்பதே. தேவனுடைய தோட்டத்தில் பணிபுரிந்து, சிருஷ்டிகளைப் பராமரிப்பது ஆசீர்வாதம் தானே!

பாவத்தின் பரிதாப நிலை
அழகிய அரண்மனையில், சாத்தான் வில்லனாக சர்ப்பத்தின் ரூபத்தில் நுழைகின்றான். பாவம் பச்சையாகவே வந்தது. பரிசுத்தத்திற்கும், பாவத்திற்கும் இடையேயான தெரிவு நிகழக்கூடிய உண்மையே. ஆதாமும், ஏவாளும் தீமைக்கு விலைபோனார்கள். கீழ்படியாமை என்னும் பாவத்தைச் செய்ததால், பயம் அவர்களை கவ்வ, தங்களை ஒளித்துக்கொண்டார்கள். சாபம் ஆசீர்வாதத்தைப் புரட்டிப் போட்டது (3:14 19). சர்ப்பத்திற்கு கொடுக்கப்பட்ட சாபத்திலேயே, நம்பிக்கை என்னும் நட்சத்திரம் தேவனுடைய வார்த்தையில் உதித்தது: உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (3:15). ஸ்தீரியின் வித்தான இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்து பாவத்தை பூரணமாக பரிகாரம் செய்யும் வாக்கு உரைக்கப்பட்டது.  ஆனால் ஆதாமுக்கும்,ஏவாளுக்குமோ பூமியை தேவசாயலில் மனிதரால் நிரப்ப வேண்டும் என்றக் கட்டளையை நிறைவேற்றுவது இப்பொழுது வேதனையும், கடின உழைப்புமாயிற்று. இன்றும் அருட்பணியை எதிராளியான சாத்தான் தடுப்பான். ஆவிக்குரிய போராட்டம் அதில் ஒரு கட்டாய நிகழ்வு.

அருட்பணியில் அனுக்கிரகம்
இரக்கமுள்ள இறைவன் பாவத்தில் வீழ்ந்த‌ நம் ஆதிப் பெற்றோரைத் தேடி முதல் மிஷனைரியாக வருகின்றார் (3: 9, 10). பாவப் பரிகாரத்தின் துவக்கத்தை இங்கு காண்கிறோம். மிருகம்/ங்கள் பலியாக்கப்பட்டு அதன் தோலாலான உடை ஆதிப் பெற்றோரின் பாவத்தாலுண்டான அவமானத்தை மூடிற்று. தவற்றுக்கானத் தண்டனையை யாராவது, எப்படியாவது நிறைவேற்றித் தானே தீர்க்க வேண்டும். பாவத்தின் வண்டலோடு ஆதாமும், ஏவாளும் ஜீவ விருட்சத்தின் கனியையும் புசித்து அப்படியே விடுவிக்க‌ முடியாத நித்திய ஆக்கினைக்குள்ளாக சென்றுவிடக்கூடாது என்று இரக்கமுள்ள இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விடுகின்றார் (3:24) ஆனால் இரட்சிப்பின் திட்டம் கொடுக்கப்பட்டுவிட்டது. கிறிஸ்து பிறப்பின் தினம் குறிக்கப்பட்டாயிற்று! கலாத்தியர் 4:4,5 இவ்விதம் கூறுகின்றது: நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். 

ஆதிப் பெற்றோர் வழியாக நாம் பெற்றிருக்கின்ற பாவ வித்துக்கள், நம்முடைய கீழ்படியாமையின் விளைவுகள் ஆகியவற்றிற்கான நம்முடைய பாவ சாபங்களை இயேசு சிலுவையில் ஏற்கெனவே சுமந்ததால் நமக்கு நம்பிக்கை உண்டு. இயேசு இவ்வுலகில் பிறந்து தன் ஊழியத்தை செய்து முடித்தார்.  ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுக்கப்பட்ட பணி தான் நாம் இன்று செய்து முடிக்க வேண்டிய‌ பணி: தேவ சாயலை இழந்து நிலைகுலைந்து போயிருக்கும் மானிடரைத் தேடி, இரட்சிப்பின் நம்பிக்கையைக் கொடுத்து, தேவனோடு அவர்களை ஐக்கியப்படுத்தி, அப்படிப்பட்டோரால் இப்பூமியை நிரப்ப வேண்டும். மீட்கப்பட்ட பாவிகளான நமக்கு இது மலையேறும் பணி தான். ஆனால் வெற்றி நமதே! 

No comments:

Post a Comment